இயந்‌திர‌ம் தயா‌ரி‌ப்பு : அமெ‌ரி‌க்க ‌நிறுவன‌‌த்துட‌ன் த‌மிழக அரசு பு‌ரி‌ந்து‌ண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்

வியாழன், 18 டிசம்பர் 2008 (14:07 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த கேடர்பில்லர் நிறுவனம் த‌மிழக‌த்த‌ி‌ல் 800 கோடி ரூபா‌ய் முதலீட்டில் க‌ட்டுமான‌ம், சுர‌ங்க‌த் தொ‌ழி‌ல்களு‌க்கு இய‌ந்‌திர‌ங்களை தயா‌ரி‌ப்பத‌ற்கான விரிவாக்கததிட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌‌தி‌ல் இ‌ன்று நடைபெற்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த கேடர்பில்லர் நிறுவனம் கட்டுமானம், சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஒரு மிகப் பெரிய நிறுவனமாகும். இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவா‌ய்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்தியாவில், பெருமளவில் முதலீடுகள் செ‌ய்துள்ள கேடர்பில்லர் நிறுவனத்தின் கட்டுமான இயந்திரங்கள், டீசல் மின்உற்பத்தி இயந்திரங்கள், இஞ்சின் தயாரிப்புப் பிரிவுகள் தமிழகத்தில் திருவள்ளூரிலும், ஓசூரிலும் ஏற்கனவே அமைந்துள்ளன. அவற்றுள் 2 ஆயிரத்து 400 பேர் நேரடியாகவும், 7 ஆயிரத்து 500 பேர் மறைமுகமாகவும் வேலைவா‌ய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிறுவனம் தற்போது 800 கோடி ரூபா‌ய் முதலீட்டில் கட்டுமானம், சுரங்கத் தொழில்களுக்குப் பயன்படும் கனரகப் பொறியியல் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கான விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்திட முடிவு செ‌ய்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்குவதுடன், சென்னைக்கு அருகில் மற்றுமொரு புதிய இடத்திலும் ஒரு தொழில் பிரிவைத் தொடங்கிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏறத்தாழ 600 பேருக்கு நேரடி வேலைவா‌‌ய்‌ப்பும், 1,900 பேருக்கு மறைமுக வேலைவா‌ய்ப்பும் வழங்கக் கூடிய இப்புதிய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, கேடர்பில்லர் இந்தியா நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஆர்.தீனமேன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்