சென்னை ஐ.ஐ.டி. இய‌க்குன‌ர் ‌மீது நடவடி‌க்கை: ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்

வியாழன், 18 டிசம்பர் 2008 (11:12 IST)
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் மது விருந்து அ‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ளது எ‌ன்று விளம்பரம் செய்யப்பட்டிருப்பது உண்மை என்றா‌ல் தமிழக அரசு இது குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் எ‌ன்று‌ம் சட்டத்திற்கு எதிராக செ‌ய‌ல்படு‌ம் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் மீதும், இதற்கு பொறுப்பான மற்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பான் ஐ.ஐ.டி. 2008 என்ற பெயரில், உலக விழாவை நடத்துகின்றது. ஐ.ஐ.டி.யில் பயின்று இன்று உலகம் முழுவதும் பணியாற்றிக்கொண்டிருப்போர் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுகிற ஓர் உலகம் கொண்டாட்டம் இது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இந்த கொண்டாட்டம் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று முதல் வரும் 21ஆ‌ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல் விவரங்கள் ஆங்கில நாளேடு ஒன்றில் முழுமையாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்னமும் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சி பூங்காவை இந்த கொண்டாட்டங்களின் போது என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்போகிறார்கள் என்பது அந்த நிகழ்ச்சி நிரல் விளம்பரத்திலிருந்து அறியும் போது, கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான சிறப்பு தேர்ச்சி நடுவமாக விளக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி பூங்கா, டிசம்பர் 19, 20 தேதிகளில் மாலையிலும், இரவிலும் விழாவில் பங்கேற்போருக்கு மதுவிருந்து அளிப்பதற்கான சாராய பூங்காவாக திறந்து வைக்கப்பட இருக்கிறது என்று நாளேடுகளில் வெளிவந்துள்ள நிகழ்ச்சி நிரல் தெரிவிக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் தான் இந்த ஆராய்ச்சி பூங்காவின் தலைவராக இருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி. உருவாக்கி வரும் இந்த ஆராய்ச்சி பூங்கா திட்டம் தனிசிறப்புடையது என்றும், புதுமையானது என்றும் கடந்த 3 ஆண்டுகளாக பெரிதும் புகழ்ந்து பேசி வந்திருக்கிறார் இதன் இயக்குனர்.

தமிழ்நாடு அரசு, இந்த ஆராய்ச்சி பூங்காவுக்கு 12 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கீடு செய்து தந்திருக்கிறது. ஆனால் இந்த திட்டம் இன்னமும் முழுமையடையவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த நடுவம் இன்னமும் தொடங்கப்படவே இல்லை. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சென்னை ஐ.ஐ.டி.யின் பொன் விழா நிகழ்ச்சியின் போதே இந்த ஆராய்ச்சி பூங்கா திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதாம்.

பின்னர், பான் ஐ.ஐ.டி. 2008 விழாவுக்காக தள்ளி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது, ஆராய்ச்சி பூங்காவாக இல்லாமல், குடித்து கும்மாளம் அடிப்பதற்கான சாராய பூங்காவாக இந்த நடுவத்தின் திறப்பு விழா நடத்தப்பட இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க இழிவான செயல்.

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையும், தமிழக அரசும் இது குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும். இந்த விளம்பரம் செய்யப்பட்டிருப்பது உண்மை என்றால், பொது இடங்களை தவறாக பயன்படுத்துகிற, சட்டத்திற்கு எதிரான இந்த செயலுக்கான சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் மீதும், இதற்கு பொறுப்பான மற்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுத்து தடுக்காவிட்டால், சென்னை ஐ.ஐ.டி.யில் உருவாக்கியிருக்கும் இந்த நோய், பிறகு அருகாமையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கும், சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்கும் பின்னர் படிப்படியாக இதர கல்லூரிகளின் வளாகத்திற்கும் பரவிவிடும். விழாக்களின் போது கல்லூரி வளாகங்கள், உரிமம் இல்லாத மது குடிப்பகங்களாக மாறி விடும். இந்த ஆபத்தை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.