தொழிலாளர் தற்கொலை பற்றி நீதி விசாரணை: சரத்குமார் கோரிக்கை
வியாழன், 18 டிசம்பர் 2008 (10:24 IST)
''எம்.ஆ.ர்எப் தொழிற்சாலையில், ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது குறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்தவேண்டும்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணம் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில், நிரந்தர தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2,500க்கு மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், 6 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் தொழிற்சாலையில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சம்பவம் நடப்பதற்கு முன்பாக முதல் ஷிப்டில் வேலை செய்த சுரேஷ்குமாரை 2வது ஷிப்டிலும் வேலை செய்ய வேண்டும் என சூப்ரவைசர்கள் வற்புறுத்தி உள்ளதாக தெரிகிறது. அவரை அவர்கள் அடித்ததாகவும், அதனால் அவர் கழிவறையில் பிணமாக தொங்கினார் என்றும் தொழிலாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
எனவே, பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். தொழிலாளர்களுடன் பேசி அவர்களின் குறைகளை களைவது அரசு கடமை என்று சரத்குமார் கூறியுள்ளார்.