திருமங்கலம் இடைத்தேர்தல்: அ.இ.அ.தி.மு.க.வுக்கு இரு கட்சிகள் ஆதரவு
புதன், 17 டிசம்பர் 2008 (16:01 IST)
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதாக அம்பேத்கர் மக்கள் கட்சியும், தமிழக மத சார்பற்ற ஜனதாதளமும் அறிவித்துள்ளது.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பது குறித்தும் அம்பேத்கர் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடக்க இருக்கின்ற திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றி பெற தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.மத்தியாஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளோம் என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜான்மோசஸ் தெரிவித்துள்ளார்.