திருமங்கலம் இடைத்தேர்தல் : கருணாநிதி கருத்து

ஞாயிறு, 14 டிசம்பர் 2008 (12:50 IST)
திரும‌ங்க‌ல‌ம் தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌‌லி‌ல் அ.இ.அ.தி.மு.க. - ம.தி.மு.க. கூட்டணி கு‌றி‌த்து கரு‌த்து‌ தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள முத‌ல்வ‌ர் கருணாநிதி "அடித்தால் என்ன; உதைத்தால் என்ன; அமிர்தமதிக்கு அந்த யானைப்பாகனைத்தான் பிடிக்கிறதென்றால்- யார்தான் குறுக்கே நிற்க முடியும்?" எ‌ன்று கதை கூ‌றி ‌விள‌க்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் திங்கள் 26ஆ‌ம் தேதியன்று முன்னாள் முத‌ல்வ‌ர் அம்மையார் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டார்; காரசாரமாக என்னையும், ‌தி.மு.க. அரசையும் கண்டித்து! அந்த அறிக்கையி‌ன் சாராம்சம் வருமாறு:

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகு; வைகோ, கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களை மட்டும் கைது செய்தால் போதாது; அவர்களைப் போலவே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் நான் ஒரு அறிக்கை வெளியிட்ட பிறகு திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப்போலவே இதே குற்றத்தை முத‌ல்வ‌ர் கருணாநிதியும் செய்துள்ளார்- அதாவது ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் என்ற இரு தலைவர்கள் இறந்த போது அவர்களுக்காக இரங்கற்பா எழுதியுள்ளார். அதனால் அவரது ஆட்சியைக் கலைப்பதோடு, அவரையும் மத்திய அரசு கைது செய்ய வேண்டுமென்று கோருகிறேன்''

இந்த அறிக்கை வெளிவந்து 50 நாட்கள் கூட முழுமையாக ஆகவில்லை. அம்மையாரின் கோரிக்கைப்படி கைது செய்யப்பட்டவர்களும் சில நாட்கள் சிறையில் இருந்து வெளிவந்துவிட்டார்கள். ஆனால் ஒன்று; வைகோவை "பொடா'' சட்டத்தின்படி கைது செய்து ஓராண்டு காலம் சிறையில் பூட்டிப்போட்டதற்கு எந்தத் திருமங்கலம் நிகழ்ச்சியும் பேச்சும் காரணம் என்று சொல்லப்பட்டதோ; அந்தத் திருமங்கலத்தில் இப்போது இடைத்தேர்தல்!

இடைத்தேர்தலுக்கு காரணம், அந்தத் தொகுதியில் வென்று ம.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் வீற்றிருந்த வீர. இளவரசன் திடீரென இளம்வயதில் மறைந்துவிட்டார் என்பதால்! அவரும் கூட வைகோவுடன் "பொடா'' சட்டப்படி சிறைப்பட்டு தண்டனையை முழுமையாக அனுபவித்தவர்தான்!

அவர் மறைந்தார் எனக் கேள்வியுற்று நானும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன்- அது ஏடுகளில் வெளிவந்தது- அதை எப்படி வெளியிடலாம்; தமிழ்ச்செல்வனுக்கும், பால சிங்கத்துக்கும் இரங்கல் வெளியிட்டதே தவறு என்கிற போது- அவர்களின் மீது பற்றும் பாசமும் கொண்ட வீர இளவரசனுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக; ``மத்திய அரசு, இந்தக் கருணாநிதியை கைது செய்து அவன் அரசையும் கலைக்க வேண்டும்'' என்று அம்மையார் கோரிக்கை அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக ஆத்திரப்படக்கூடிய- அல்லது குமுறக்கூடிய- உணர்வுள்ளவர்கள் ம.தி.மு.க. கூடாரத்தில்தான் யார் இருக்கிறார்கள்?

யசோதர காவியம் என்று சமண சமயக் கதையொன்று உண்டு. அதில் "அமிர்தமிதி'' என்ற ஒரு ராணி- அவளை மணந்தவன், அந்த நாட்டு மன்னன் "யசோதரன்'' என்பவன்- சுந்தரரூபன்- சுகுமாரன்-

ராணியின் மனமறிந்து மகிழ்ச்சி அளிக்கும் மன்னன்தான் அந்த யசோதரன். அத்தகைய செங்கோலேந்தியின் சிற்றின்பக் கூடாரத்தை அலங்கரிக்கக் கூடிய பாக்கியம் அந்தச் சிங்கார ராணி அமிர்தமிதிக்குக் கிடைத்திருந்தது. மன்னவனின் மஞ்சத்து மயில் என்றால் சாதாரணமா? தாதிகள் உண்டு; தயவு கேட்டு நிற்கப் பல சேவகர் உண்டு! தங்கம் கலந்த உணவை உண்டு- அங்கம் பூரிப்பு கொண்டு- காதல் மிஞ்சுவதே சேடி காவலனைக் கூப்பிட்டு வாடி! என்று அழைத்த கணமே அவர்கள் ஓடி, ஆடிப்பாடி அரசனை அழைத்து வருவர்.

ஆனைமேல் அம்பாரியா? அணி தேர்ச்சவாரியா? பூனைரோமத்தால் மிதியடியா? புலிப்பாலா! புரவிக் கொம்பா? எது கேட்பினும் தருவர்- அதற்கெனவே எடுபிடிகள் ஏராளமாக உளர். இந்தச் செல்வாக்கின் மத்தியிலே செல்ல நடைபோடும் சேயிழையாள் அந்த அமிர்தமதி!''

"அழகி அமிர்தமதியும், அரசன் யசோதரனும் ஒருநாள் அந்தப்புரத்தில் இன்பக்கேளிக்கையில் ஈடுபட்டனர். கட்டிற்காவியம் எழுதி முடித்தனர்- கண் அயர்ந்தனர். அரசன் தூங்கும் சமயம், ராணி கண் விழித்தாள். ஆமாம்! மலர் விழித்துக் கொண்டது; வண்டோ தூங்கிக் கொண்டிருந்தது. விழிந்த சமயம் அந்த இரவில் ஒரு பாடல், ராணியின் காதில் ஒலித்தது! அந்தப்பாடல் வந்த பக்கம் கருத்தை செலுத்தினாள். அந்தப்பாடல் இசைத்தவனைக் கட்டித் தழுவ வேண்டும் என்று துடித்தாள்''

"மறுநாள் தன் தோழி குணவதியை அனுப்பினாள். அர்த்த ராத்திரியிலே பாடியவன் யாரென்று அறிந்துவர தோழியும் போய் அவனைக் கண்டாள். இசையை எழுப்பியவன் ஒரு யானைப்பாகன். அவன் எப்படிப்பட்ட அழகுடையவன் தெரியுமா? தோழி வாயிலாக யசோதரக் காவியக் கவிஞர் கூறுகிறார். அது இது!

``நரம்புகள் வசித்த மெய்யன், நடையினிற் கழுதணிந்தோன், திரங்கிய விரலன், கையன், சிறுமுகன், சினவன், சீறிற்குரங்கினை யனையன், கூனன், குழிந்து புக்கழிந்த கண்ணன்!''

``இன்னும் பலவாறாக அவனது விவகாரங்களை வர்ணித்து அவன் மீது ஆசை வைப்பது தகாது என்று ராணியிடம் தோழி கூறுகிறாள். அமிர்தமதியோ `அவன் எப்படியிருந்தாலும் கவலையில்லை. அவனை அணைத்து மகிழத்தான் வேண்டும்' என்று துடிக்கிறாள். `கனியிருப்பக் காய் பறிக்கலாமா அம்மா? சகல அழகும் பொருந்திய அரசர் பெருந்தகையின் மனைவியாகிய நீங்கள், கேவலம் குரங்கைப் போன்ற - ஒரு சாக்கடை மனிதனைக் கொஞ்சிக் குலவ விரும்பலாமா தாயே!'' என்றெல்லாம் குணவதி தடுத்தாள்.

ஆனால் அரசியோ, அவன் எப்படியிருந்தால் எனக்கென்ன; அவன் அணைப்பிலேதான் சுகம் இருப்பதாக நான் உணர்கிறேன் என்று கூறியதோடு, அந்தப் பாடல் கற்ற யானைப்பாகனையும் வலிய வரவழைத்து, வாரி அணைத்து மகிழ்ந்தாள். நாளொரு மேனியாக, அந்த நாய்க்காதல் வளர ஆரம்பித்தது. ஒருநாள் அரசனே அவர்களது.... காதல் களியாட்டத்தைத் தூர நின்று பார்த்து விட்டான்.

அப்போது என்ன நடந்தது தெரியுமா? அரசன் எந்தக் காட்சியை கண்டான் தெரியுமா? வழக்கமாக யானைப்பாகன் அட்டபங்கன் என்னும் பெயருடைய அந்த அவலட்சணம், அமிர்தமதியின் அழகுக் கருங்கூந்தலைக் கையால் இழுத்து எறிந்து, அவளைக் கீழே தள்ளி, இரு கால்களாலும் நையப்புடைத்து `ஏன் காலம் தாழ்த்தி வந்தாய்?' என்று கனல் கிளம்பக் கேட்கிறான்''.

``கட்டளையிட்டால், யோசனை என்ற தூரம் ஓடிக் காரியமாற்றிடும் பணியாளர்களின் தலைவி- மண்டலாதிபதியின் மனைவி- ஓர் அழுகிய உடல் படைத்த யானைப்பாகன், தன்னைத் திட்டி உதைத்து அடிப்பதிலே சுகம் காண்கிறாள்''

``அவள் மலர்ப்பாதங்களை அர்ச்சிக்க ஆயிரம் பேர் காத்திருப்பர்- அவள் அந்த பாகனின் கால்களைக் கண்ணில் ஒத்திக் கொண்டு காலந்தாழ்மைக்கு மன்னிப்புக் கோருகிறாள்''

இதுதான், யசோதர காவியத்தின் சுவையான (?) சுருக்கம்.

இதைப்படிக்கும்போதும், படித்த கதையை நினைத்து, நெற்றி சுருக்கி சிந்திக்கும் போதும்; "அமிர்தமதி'' போல சில கட்சித்தலைவர்கள் நமக்கு காட்சியளிக்கிறார்கள் அல்லவா!

யானைகளில் வீரர்கள் அமர்ந்து காவல்புரியும் அரண்மனை- அந்தப்புரம்- அங்கே அரசனின் அரவணைப்பு- இவற்றைவிட; யானைப்பாகன் ஒருவன்; அதிலும் அழுகிப்போன மேனி- அதிலும் தாமதமாக ஏன் வந்தாய் என்று அவளைக் காலால் உதைத்து உதைத்து தண்டனை கொடுத்துவிட்டு; அதன்பிறகு அவளுடன் சல்லாபிக்கிறான்; அதைத்தான் அமிர்தமிதி அடங்காத வேட்கையுடன் விரும்புகிறாள்- இப்படி சில ஜென்மங்கள்- சில அரசியல்வாதிகள்- என்று முணுமுணுக்கத் தோன்றுகிறதல்லவா?

அடித்தால் என்ன; உதைத்தால் என்ன; அமிர்தமதிக்கு அந்த யானைப்பாகனைத்தான் பிடிக்கிறதென்றால்- யார்தான் குறுக்கே நிற்க முடியும்?" எ‌ன்று கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்