''மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழகம் 2வது இடம் வகிக்கிறது'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
webdunia photo
FILE
மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுழல்நிதி வழங்கும் விழா, வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, கட்டடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமநாதபுரத்தில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமை வகித்தார்.
விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.18.28 கோடி நிதி வழங்கியும், ரூ.13.54 கோடி மதிப்பில் 16 வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.56.92 கோடியில் முடிக்கப்பட்ட 480 பணிகளை திறந்து வைத்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவினர் 3,811 கோடி வங்கிக்கடனாக பெற்றுள்ளனர்.
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழகம் 2ம் இடம் வகிக்கிறது. 99 விழுக்காடு கடன் முறையாக திருப்பி செலுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ஜனவரி 2007ல் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இப்போது 95 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளன. குடிநீர் விநியோகத்தை, தமிழ்ப்புத்தாண்டான பொங்கல் திருநாளில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
திருமண நிதி உதவி திட்டம், தமிழகம் போல் இந்தியாவில் வேறெங்கும் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தில், இதுவரை 42,787 பெண்களுக்கு ரூ.64.57 கோடி வழங்கப்பட்டுள்ளது. இலவச எரிவாயு இணைப்பு 6.84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 அரிசி வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஜெயலலிதா, குழம்பு வைக்க முடியாத அளவுக்கு மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக குறை கூறினார். இப்போது மளிகை பொருட்களும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.