மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அஇஅதிமுக-விற்கு மதிமுக ஆதரவு தெரிவித்திருப்பதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவிற்கு ஜெயலலிதா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வீர. இளவரசன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் திருமங்கலம் தொகுதியில் கடந்த தேர்தலில் மதிமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற போதிலும், தற்போது நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அஇஅதிமுக போட்டியிடும் என்றும், அக்கட்சியின் வேட்பாளருக்கு மதிமுக ஆதரவளிக்கும் என்றும் வைகோ கூறியுள்ளார்.
இதையடுத்து அஇஅதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வைகோவிற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகவும், அதில் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவளித்து எடுத்துள்ள முடிவுக்காக வைகோவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.