தொழிலாளர் நலத்திட்ட உதவித் தொகை தாமதமின்றி பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் துறை அலுவலர்களின் பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியக் கருத்தரங்கு கூட்டத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை அரசுச் செயலர் பிரபாகர ராவ், தொழிலாளர் ஆணையர் சுகுமாரன், தொழிலாளர்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில், மண்டல, வட்டாரத் தொழிலாளர்துறை அலுவலர்களின் பணிகள், தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகளில் தற்போது நிலவிவரும் வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள் குறித்தும், முக்கிய தொழிற் தாவாக்கள் குறித்தும் விரிவாக திறனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளர் துறை அலுவலர்கள், தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட தொழில் நிறுவனங்களில் ஏற்படுகின்ற தொழிலாளர் பிரச்சனைகளை சட்ட வரையறைக்கு உட்பட்டு உரிய முறையில் தீர்வு காணவும், பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்திட தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழகத்தில் தொழில் அமைதியினைப் பேண அனைத்து அலுவலர்களும் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டுமென அமைச்சர் அன்பரசன் ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் அமைச்சரால் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட அமைப்புசாரா நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து திறனாய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வமயம் நல வாரியப் பணிகளில் தொய்வில்லாமல் பதிவுகள் மேற்கொள்ளவும், உதவித் தொகை கோரி தொழிலாளர்கள் அளித்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்திடவும், நலத்திட்ட உதவித் தொகை தாமதமின்றி பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பரசன் அறிவுரைகள் வழங்கினார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.