சொத்துவரி உயர்வை கண்டித்து மதுரை திருமங்கலத்தில் நாளை அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார வெட்டின் காரணமாக, மதுரை மாவட்டத்தில் விவசாயம், அதனைச்சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலூரில் மின்வெட்டின் காரணமாக கலப்பை, விவசாய கருவிகள் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதால் இத்தொழில் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர், உறங்கான்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் உள்ள சிறுதொழில் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதன் விளைவாக மேற்படி தொழிற்பேட்டைகளை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு, வேலை இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன. இது தவிர மாணவ - மாணவியர்கள், குழந்தைகள், முதியோர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் மின்வெட்டால் அன்றாடம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்திற்கு உட்பட நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிற்கான சொத்து வரியை தி.மு.க. அரசின் உத்தரவின் பேரில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பன்மடங்கு உயர்த்தி உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் மீது கூடுதல் நிதிச் சுமை திணிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (13ஆம் தேதி) காலை 10 மணி அளவில், திருமங்கலம் நகரத்தில் அமைந்துள்ள தேவர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.