அடு‌த்தவார‌ம் கொழும்பு செல்கிறார் பிரணாப் முகர்ஜி: டி.ஆர்.பாலு தகவல்

வியாழன், 11 டிசம்பர் 2008 (18:03 IST)
இலங்கையில் போரை நிறுத்துவது பற்றி வலியுறுத்த மத்திய வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணாப்முகர்ஜி அடுத்தவாரம் கொழும்பு செல்கிறார் என்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

கடந்த 4ஆ‌ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை, தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து‌க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு, வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியை நே‌ற்று சந்தித்து பேசினார். அதன்பிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய டி.ஆர்.பாலு, "இன்னும் 5 அல்லது 6 நாட்களில் அதாவது அடுத்தவாரம் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார்'' என்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்