சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக தாக்கல் செய்த பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
TN.Gov.
FILE
வழக்கறிஞர்கள் எஸ்.மனோகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சேலம் அங்கம்மாள் காலனியில் குடியிருந்தவர்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மீண்டும் அந்த பகுதியில் குடியிருந்தவர்களை குடியமர்த்தக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கம்மாள் காலனியில் குடியிருந்தவர்கள் பற்றி விசாரித்து மீண்டும் குடியமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இது தவிர பழமை வாய்ந்த சேலம் ஆட்சியர் அலுவலகத்தை இடிக்க தடை கேட்டு தொடர்ந்த வழக்கில் 7 நாட்களுக்குள் மனுதாரர் மீண்டும் அரசுக்கு மனு கொடுக்க வேண்டும் என்றும், அதுவரை கட்டடத்தை இடிக்க தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி சேலம் ஆட்சியர் அலுவலகம் இடிக்கப்பட்டது.
இந்த இரண்டு உத்தரவுகளையும் அரசு அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் செயல்படுவதே இதற்கு காரணம். எனவே, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் அமல்படுத்தினார்களா? என்பது பற்றி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
அங்கம்மாள் காலனியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை தலைமை இயக்குனருக்கு (டி.ஜி.பி) உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி நீதிபதிகள் மனுவை நிராகரித்தனர்.