வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவின‌ர் ஆ‌ய்வு: விவசாயிகள் முறை‌யீடு

புதன், 10 டிசம்பர் 2008 (13:46 IST)
தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பா‌ர்வை‌யி‌ட்ட மத்திய குழுவின‌ரிட‌‌ம், அ‌திக ந‌ஷ்டஈடு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விவசா‌‌யிக‌ள் முறை‌யி‌ட்டன‌ர்.

நிஷா புயல் காரணமாக, கடந்த மாதம் ஒரு வாரத்துக்கு கனமழை பெய்ததால், தமிழகத்தின் 12 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று, வெள்ளப்பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் ஸ்கந்தன் தலைமையில் 9 பேர் கொண்ட மத்தியக் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பினார்.

சென்னை வந்த மத்தியக் குழுவினர் 2 குழுவாக பிரிந்து வெள்ள பாதிப்புகளை நேற்று பார்வையிட்டனர். ஸ்கந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை தஞ்சை சங்கம் ஓட்டலில் ஆ‌ட்‌சிய‌ர் சண்முகம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை காட்டி சேத விவரங்களை அதிகாரிகள் விளக்கினர்.

அதன்பிறகு, தஞ்சை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை குழுவினர் பார்வையிட்டனர். பருத்திக்கோட்டையில் அழுகிய நெற்பயிர்களுடன் சாலையில் விவசாயிகள் நின்றிருந்தனர். அவர்களிடம் சேத விவரங்களை குழுவினர் கேட்டறிந்தனர்.

வடசேரி கண்ணனாற்றில் உடைப்பு ஏற்பட்டு 700 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதையும், முக்கிய சாலைகள் அரிக்கப்பட்டிருப்பதையும், ஏரிகள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டிருப்பதையும் குழுவினர் பார்த்தனர்.

குழு தலைவர் ஸ்கந்தன் கூறுகையில், ''மழை வெள்ளத்தால் தஞ்சை மாவட்டத்தில் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. தாராளமாக நிதியுதவி வழங்க போதிய காரணங்கள் உள்ளன'' என்றார்.

மத்திய அரசின் குடிநீர் விநியோகத்துறை கூடுதல் ஆலோசகர் தேஷ்பாண்டே தலைமையிலான மற்றொரு குழுவினர் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள், உடைந்த பாலங்கள், சேதமடைந்த சாலைகள், குடிசை பகுதிகள், கடலூர் அருகே உடைந்த கெடிலம் ஆற்றுப்பாலம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

கடலூர் முதுநகர் அருகே பீமாராவ்நகர் குடிசைப்பகுதியில் வெள்ளம் வடியாமல் உள்ளதை பார்வையிட்ட குழுவினரிடம், ஒவ்வொரு மழை வெள்ளத்தின்போதும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க கூறினர்.

பரவனாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பூதம்பாடி, கல்குணம், ஓனான்குப்பம் கிராமங்களில் விளைநிலங்களையும் குழுவினர் பார்வையிட்டனர். அவர்களிடம், அழுகிய நெற்பயிர்களை காட்டி விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். வாலாஜா ஏரி, பரவனாறு வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட மருவாய் சாலை, மூழ்கிய விளைநிலங்களையும் பார்வையிட்டனர்.

சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெராம்பட்டு, வல்லம்படுகை, எருக்கன்காட்டுப்படுகை, வடக்கு மாங்குடி, அத்திப்பட்டு கிராமங்களையும் குழுவினர் பார்த்தனர்.

திருவாரூர், நாகையில் குழு ஆய்வு

ஸ்கந்தன் தலைமையிலான குழுவினர் இன்று திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்க்கின்றனர். தேஷ்பாண்டே தலைமையிலான குழு நாகை மாவட்டத்தில் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்