கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.-ம.தி.மு.க. பங்கேற்பு
புதன், 10 டிசம்பர் 2008 (11:10 IST)
திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறும் கம்யூனிஸ்டு சங்கங்களின் மறியல் போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர்கள் தெரிவித்துள்ளனர்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் புயல், மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் எண்ணிக்கையில் நிராதரவாக நிற்கும் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதற்காக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் இணைந்து வருகின்ற 11ஆம் தேதி வியாழக்கிழமை நடத்த உள்ள மறியல் போராட்டத்தில். அ.இ.அ.தி.மு.க.வும் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இதேபோல் ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொடர்ந்து பெய்த பெரு மழையாலும், வெள்ளத்தாலும் கடும் அல்லலுக்கு ஆளாகியுள்ள மக்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையும் நிவாரணமும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து நாளை நடத்தவுள்ள மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்'' என்று தெரிவித்துள்ளார்.