சரத் பொன்சேகா திமிர்ப்பேச்சு : பிரதமருக்கு வைகோ கடிதம்
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (17:24 IST)
தமிழக அரசியல்வாதிகள் பற்றிய பேச்சிற்கு மன்னிப்பு கேட்குமாறு சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை வற்புறுத்துவதுடன், சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடம் இந்தியா விளக்கம் கேட்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த 7ஆம் தேதி அளித்துள்ள பேட்டியில் தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்றும், சிறிலங்கா அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்காது என்றும் கூறியிருக்கிறார்.
இந்திய வரலாற்றில் அயல்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் நமது அரசியல் தலைவர்களை இப்படி விமர்சித்த சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை. ஜனநாயகத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் அயல்நாட்டு அரசியல்வாதிகளை விமர்சிப்பது முறையல்ல. இந்திய அரசையும் இந்திய மக்களையும் அவர் அவமானப்படுத்தி விட்டார்.
சரத் பொன்சேகாவின் பேச்சு பற்றி இந்திய அரசு சிறிலங்கா அரசிற்குத் தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவும் இந்தியா வற்புறுத்த வேண்டும். சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடம் விளக்கம் கேட்க வேண்டும். சிறிலங்கா அரசு இதற்கு பணியாவிட்டால் இந்திய அரசு ராஜிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும்.