24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் பொ‌ன்சேகா ம‌ன்‌‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம் : ராமதாஸ் எச்சரிக்கை

திங்கள், 8 டிசம்பர் 2008 (11:25 IST)
தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று விமர்சனம் செய்த இலங்கை போர்ப்படை தளபதி பொன்சேகா இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள இலங்கைத் தூதரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்தி‌ற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எ‌ன்று வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான போர்ப்படையினரின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கைவிட வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து‌க்கட்சி தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

இதனால், ஆத்திரமடைந்துள்ள சிங்களப் போர்ப்படை தளபதி பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அரசியல் கோமாளிகள் எனத் தரம்தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்து தனது சிங்கள இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம். அதில் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்தான் என்றும், சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதற்கு தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொக்கரித்தவர் இவர். இப்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதன் மூலம் தனது சிங்கள இனவெறியை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியிருக்கிறார் சிங்களப் போர்ப்படை தளபதி.

இலங்கையைப் பொறுத்தவரையில் ராஜபக்சே அதிபராக இருந்தாலும், போர்ப்படை தளபதியான பொன்சேகா தான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரிபோல பேசியும், செயல்பட்டும் வருகிறார். எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனம் என்று எடுத்துக்கொள்ள கூடாது. இலங்கையின் குரலாகவே, சிங்கள அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில், ராஜபக்சேவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள இலங்கைத் தூதரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இலங்கை இதற்காக பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் எனத் டெல்லிக்கு எடுத்துக் கூற வேண்டும். அத்துடன் வெளியுறவுத் துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியை இன்னும் காலம் தாழ்த்தாமல் 48 மணி நேரத்திற்கு உள்ளாக கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கைவிடச் செய்வதுடன், அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டை நிறுத்தப்படுவதன் மூலம் தமிழர்களின் தன்மானத்திற்கு இலங்கைப் போர்ப்படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் டெல்லிக்கு எடுத்து கூற வேண்டும்'' எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.