சென்னைக் குடிநீர் வாரியத்தில் 108 வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணையினை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னைக் குடிநீர் வாரியத்தில், வாரிய பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறுவதற்காக, தற்சமயம் நான்கு புதிய பொலிரோ வாகனங்கள் ரூ.23.40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு பணிகளை செவ்வனே நிறைவேற்றுவதற்காக அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை செயலர் நிரஞ்சன்மார்டி, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சுனீல்பாலீவால் ஆகியார் உடன் இருந்தனர்.
சென்னைக் குடிநீர் வாரியத்தில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பளிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் 9.7.2007 அன்று 22 வாரிசுதாரர்களுக்கும், 11.1.2008 அன்று 28 வாரிசுதாரர்களுக்கும், 26.1.2008 அன்று 5 வாரிசுதாரர்களுக்கும், 21.5.2008 அன்று 35 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 90 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று 108 வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணையினை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 100 வாரிசுதாரர்கள் களப்பணியாளர்களாகவும், 6 வாரிசுதாரர்கள் இளநிலை உதவியாளர்களாகவும், 2 வாரிசுதாரர்கள் தட்டச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இதுவரை 189 வாரிசுதாரர்கள் களப்பணியாளர்களாகவும், 7 வாரிசுதாரர்கள் இளநிலை உதவியாளர்களாகவும், 2 வாரிசுதாரர்கள் தட்டச்சர்களாகவும் ஆக மொத்தம் 198 வாரிசுதாரர்கள் இவ்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.