ஈரோட்டில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சனி, 6 டிசம்பர் 2008 (11:25 IST)
முதலீடு செய்த பணத்தை திருப்பி வழங்ககோரி ஈரோட்டில் தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் கிளை தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக இருப்பவர் சிவக்குமார். கடந்த ஐந்தாண்டுகளாக இதே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இப்பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் இந்த கிளை தபால் நிலையத்தில் பணம் சேமிப்பு, டெபாசிட் செய்துள்ளனர். இவர்களுக்கு பாஸ் புத்தகத்தில் மட்டும் வரவு வைத்து கொடுக்கும் சிவக்குமார், பணத்தை கையாடல் செய்துவிட்டதாக இப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்தனர்.
ஈரோடு தலைமை தபால் நிலையம் சென்று பார்த்தபோது இது தெரிந்தது என கூறினார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொல்லம்பாளையம் கிளை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சூரம்பட்டி காவல்துறையினர், தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிவக்குமார் கையாடல் செய்யப்பட்டது உண்மை என்று தெரிந்தது.
பொதுமக்கள் தங்கள் பாஸ் புத்தகத்துடன் இன்று கொல்லம்பாளையம் கிளை தபால் நிலையத்திற்கு வரவேண்டும் என கூறியுள்ளனர். இதன் பின்னரே கையாடல் செய்த தொகை எவ்வளவு என கணக்கிடமுடியும் என்றும் அதன்பின்னரே பணம் திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.