இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை `ஏல' முறையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற 'டிராய்' அமைப்பின் வேண்டுகோளினை முற்றிலும் புறக்கணித்து, 'முதலில் வருபவருக்கு முதலில் தரப்படும்' என்ற அடிப்படையில் இந்தத் துறையில் அனுபவம் இல்லாத லெட்டர் பேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கி மத்திய அரசுக்கு 60,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராசா.
இது குறித்து தொடரப்பட்ட இரண்டு பொது நல வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்ததோடு மட்டும் அல்லாமல், இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.
எனது ஆட்சிக் காலத்தில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பில் பாசன நீர்தேக்கத்திற்காக, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள பச்சைமலை, செம்மலையில் இருந்து உற்பத்தியாகும் விசுவக்குடி கிராமத்தின் அருகே உள்ள கல்லாற்றின் குறுக்கே அணை அமைக்க உத்தரவிட்டேன். இந்த விசுவக்குடி அணைத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வேளாண் உற்பத்தி பெருகி இருக்கும். ஆனால், எனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்ததிட்டம் என்பதற்காக மைனாரிட்டி தி.மு.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இதே போன்று, வேப்பந்தட்டை தாலுகா, ஒய்.களத்தூருக்கும் - வண்ணாரம் பூண்டிக்கும் இடையே உள்ள கல்லாற்றின் குறுக்கே உள்ள பாலம் இடிந்து ஆற்றில் விழுந்துவிட்டதன் காரணமாக, பெரம்பலூர்- கடலூருக்கு இடையேயான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
மேற்கண்ட மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றுவதில் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினரான ராசாவும், தி.மு.க. அரசும் கவனம் செலுத்துவதில்லை. அதேசமயத்தில், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் சொத்துவரியை 25 விழுக்காட்டில் இருந்து 100 விழுக்காடு வரையிலும் நகராட்சி நிர்வாகம் உயர்த்தி மக்களை ஆற்றொணாத்துயரத்திற்கு ஆளாக்கி உள்ளது.
இதை கண்டித்து பெரம்பலூர் மாவட்டக்கழகத்தின் சார்பில், வரும் 7ஆம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.