வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த ரூ.1538 கோடியில் திட்டம்: மு.க.ஸ்டாலின்
வியாழன், 4 டிசம்பர் 2008 (17:57 IST)
சென்னை உள்பட மாநிலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த ரூ.1538.04 கோடிகளில் வடிகால் பகுதிகளை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN.Gov.
TNG
ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் மாநில அளவிலான எட்டாவது ஒப்பளிப்புக் கூட்டம் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.2,256 கோடி மதிப்பீட்டிலான 13 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை உள்பட மாநிலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த ரூ.1538.04 கோடிகளில் சென்னை மாநகராட்சி, பொதுப் பணித்துறை திட்டம் சமர்ப்பித்திருந்தது.
5வது மாநில அளவிலான ஒப்பளிப்புக்குழு சென்னை மாநகராட்சி முழுவதற்கும் முழுமையான ஒரு திட்டத்தை மத்திய அரசிற்கு அனுப்பி இருந்தது.
இதில் மத்திய அரசு சில மாறுதல்கள் கோரியிருந்தது. அதன்படி ரூ.1538.04 கோடியில் திட்டம் சமர்பிக்கப்பட்டது. இதனை மத்திய அரசுக்கு இக்குழு பரிந்துரைத்திட முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் படி ரூ.838.02 கோடியில் சென்னை மாநகராட்சியால் அனைத்து பகுதிகளிலும் வடிகால் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையால் ரூ.415.47 கோடியில் திட்டங்களை செயல்படுத்தி நீர் நிலைகளில் வடிகால் வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.