முல்லைப் பெரியாறு : பாராளுமன்ற குழு கருத்தை ஏற்க முடியாது - துரைமுருகன்!
புதன், 3 டிசம்பர் 2008 (21:04 IST)
"பாராளுமன்ற குழு ஒன்று முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று 10 நிமிடம் பார்வையிட்டு அணை பலவீனமாக இருக்கிறது, புதிய அணை கட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருப்பது, தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல" என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு தருவது கேரள அரசினுடைய கடமையாகும். ஆனால் அதற்கும் சில சட்ட சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது கேரள அரசு. அதையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்காடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பாராளுமன்ற குழு ஒன்று முல்லை பெரியாறு அணைக்குச் சென்று 10 நிமிடம் பார்வையிட்டு அணை பலவீனமாக இருக்கிறது, புதிய அணை கட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருப்பது, தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
இந்தக் குழுவினுடைய கருத்து குறித்த ஆட்சேபனையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவிக்கும்" என்று துரைமுருகன் கூறியுள்ளார்.