அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கருணாநிதி டெல்லி பயணம்
புதன், 3 டிசம்பர் 2008 (17:26 IST)
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், அங்கு போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த கோரி பிரதமரை சந்திப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் கருணாநிதி இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார்.
இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் பிரதமரை சந்திப்பது என்றும், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் 4ஆம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அங்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர், 'இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அப்போது உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் நாளை பிரதமரை சந்திக்கிறார்கள்.
இதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து `ஜெட் ஏர்வேஸ்' விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் திராவிடர் கழக தலைவர் வீரமணி, ஜனநாயக முற்போக்கு கழக தலைவர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும் சென்றனர்.
பா.ம.க. சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கோ.க.மணி, காங்கிரஸ் சார்பில் சுதர்சனம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார், எம்.ஜி.ஆர். கழகம் கட்சித் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அப்துல் பாசித் (முஸ்லிம் லீக்), லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பேராயர் எஸ்றா சற்குணம் (இந்திய சமூகநீதி இயக்கம்), ஐதர் அலி (தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம்), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), திருப்பூர் சுல்தாப் (தமிழ் மாநில தேசிய லீக்) ஆகியோர் இன்று மாலை டெல்லி சென்றனர்.
இக்குழுவினர் கருணாநிதி தலைமையில் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசவுள்ளனர்.