கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி, கோவிந்தா, சுந்தர், காளிமுத்து ஆகியோர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை சிறிலங்க கடற்படையினர் கைது செய்தனர்.
இதேபோல் கடந்த மாதம் 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 17 மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை சிறிலங்க கடற்படையினர் கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக குற்றம்சாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிவடைந்து 21 மீனவர்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறிலங்கா சப்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 21 மீனவர்களை விடுதலை செய்யுமாறும், அவர்களுடைய படகுகளை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 21 பேரும் நாளை சிறிலங்காவில் இருந்து இந்திய கடலோர காவல்படையினரால் மண்டபம் அழைத்து வரப்படுகிறார்கள்.