ஈரோடு : புதிய தொழில் தொடங்க ரூ.2 கோடி மானியம்

புதன், 3 டிசம்பர் 2008 (12:11 IST)
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ரூ.2 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலமைய பொதமேலாளர் ஏகாம்பரம் கூறியு‌ள்ளா‌ர்.

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஈரோடு சிறுதொழில்கள் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஏகாம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது :

பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் காதிகிராம வாரிய வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணை‌த்து நடப்பாண்டு முதல் பிரதமர் வேலை உறுதி அளிப்பு திட்டம் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் கிராம‌ப் புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு 35 ‌விழு‌க்காடும், நகர்புறங்களில் தொழில் தொடங்குவோருக்கு 25 ‌விழு‌க்காடு‌ம் மானியம் வழங்கப்படும்.

இந்த திட்ட‌த்‌தி‌ன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.60 லட்சமும், காதிகிராம தொழில் கமிஷனுக்கு ரூ.98 லட்சமும், கிராம தொழில் வாரியத்திற்கு ரூ.1 கோடியே 1 லட்சமும் மொத்தம் ரூ.2 கோடியே 7 லட்சம் மானியமாக நடப்பு ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் கிராம புறத்தில் ரூ.10 லட்சத்திற்கு புதிய தொழில் தொடங்க வந்தால் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் போதுமானது எ‌ன்று ஏகாம்பரம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்