வனவிலங்குகள் சரணாலயமாக மாறியது சத்தி வனப்பகுதி!

புதன், 3 டிசம்பர் 2008 (12:11 IST)
சத்தியமங்கலம் வனப்பகுதி தற்போது வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது சத்தியமங்கலம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் காட்டயானைகள், புலி, சிறுத்தை, கழுதைபுலி, காட்டெருமை, சுருளைகொம்பு மான், மற்ற மான் வகைகள், கரடி, செந்நாய், எறும்பு திண்ணி, மலைப்பாம்பு, அனுமன்மந்தி மற்றும் சாதாரண குரங்கு வகைகள் கொண்ட அனைத்து வஉயிரினங்கள் அதிகமாக வசித்து வருகின்றது.

தமிழகத்திலேயே சத்தியமங்கலம் வனப்பகுதியில்தான் காட்டு யானைகள் அதிகமாக வசித்து வருகிறது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா வனப்பகுதியை சேர்ந்த காட்டயானைகள் சங்கமிக்கும் இடமாக பவானிசாகர் வனப்பகுதிக்குட்பட்ட தெங்குமரஹடா உள்ளது. கடம்பூர் மற்றும் தலமலை வனப்பகுதிகள் மிகவும் அடர்த்தியானவை.
webdunia photoWD

இந்த பகுதிகளில் வனவிலங்குகள் எவ்வித தொந்தரவும் இன்றி அமைதியாக வாழ்ந்து வருகின்றது. இந்த வழியாக செல்லும் வனப்பாதையில் கூட வனத்துறை வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை அனுமதிப்பதில்லை. சோதனை‌ச் சாவடி அமைத்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலத்திற்கு ரயில்திட்டம் கொண்டுவர தற்போதைய கோபி ம‌க்களவை உறு‌ப்‌பினரு‌ம், மத்திய ஜவுளி துறை இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முயற்சி செய்தார்.

ஆனால் வனவிலங்கு ஆர்லர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த திட்டத்தை தடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதியில் இருந்து சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை சேர்ந்த தலமலை காப்பு வனப்பகுதியில் 21,080 ஹெக்டர் மற்றும் கடம்பூர் வனப்பகுதியை சேர்ந்த குத்தியாலத்தூர் காப்பு வனப்பகுதியை சேர்ந்த 29,247 ஹெக்டர் வனப்பரப்பு வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் வரும் ரயில் திட்டம் முற்றிலும் கைவிடப்படும் என வனவிலங்கு ஆர்லர்கள் தெரிவித்தனர்.