வெள்ளச்சேதத்தில் இருந்து விடுபட ஒரு நிரந்தர திட்டத்தை தீட்டி ஏன் இந்த அரசுகள் செயல்படவில்லை என்பதே மக்களின் ஏக்கம் என்று தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிச்சை எடுக்கிறவர்களுக்கு பெயர் என்ன என்று கேட்டால், லட்சுமி என்று சொன்னாளாம், அதைப்போல இருக்கிறது சீரழிந்து வரும் சென்னையை சிங்கார சென்னை என்று பட்டம் கொடுத்து அழைப்பது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து அடைமழை பெய்ததால் அனைத்து பகுதிகளிலும் அன்றாட வாழ்க்கை மிகப்பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மழைக்காலம் என்று தெரிந்திருந்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது மக்கள் பட்ட கஷ்டங்களில் இருந்தே தெளிவாகிறது.
வீடு இழந்தவர்களுக்கும், அன்றாட ஊதியம் பெறும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கும், கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியாமல் கஷ்டப்படுகிற மீனவர்களுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டது. தற்பொழுது தமிழக முதலமைச்சர் கருணாநிதி ரூ.2 ஆயிரத்தோடு 10 கிலோ அரிசியும் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இவையெல்லாம் உண்மையில் வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த ஆளுகின்ற கட்சியினருக்கும் அவர்கள் கைகாட்டுகின்ற ஆட்களுக்கும் தான் கிடைக்கிறது. சமவாய்ப்பு, சமநீதி எங்கே போயிற்று?
வெள்ளம் வடிவதற்கான ஆறுகள், வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரி, குளங்கள் ஆகியவற்றை தூர்வாரி அவற்றின் கொள்ளளவை அதிகப்படுத்தி இருக்க வேண்டும். இதற்கென ஒதுக்கிய பணத்தையும் ஒதுக்கிக் கொள்கிறார்களே தவிர உண்மையாக தூர்வாருவது இல்லை. இந்த வெள்ளத்தில் ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் வாய்க்கால்களாகவும் ஆறுகளாகவும் ஓடின. அடியோடு போக்குவரத்து நின்று விட்டது. சாலைகளுக்கு ஒதுக்கிய பணம் சரியாக செலவு செய்யப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
உண்மையான சேதத்தை கணக்கிட்டு அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமளவுக்கு விவசாயிகள் தங்கள் விளைச்சலை இழந்துள்ளனர். ஏழை, நடுத்தர மக்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பலர் உயிரிழந்தும், படுகாயமுற்றும் உள்ளனர்.
இத்தகையோர்களுக்கு உரிய இழப்பீடு கணக்கிட்டு வழங்கப்படுவது அவசியம். தற்போதைய ஒதுக்கீடான ரூ.100 கோடி சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயம்தான். வெள்ளச் சேதத்திற்குரிய மத்திய- மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களின் மூலமே பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, இந்த தடவை புயல், மழையால் சென்னை மாநகரமே மிதந்தது. குடிநீரோடு கழிவு நீர் கலந்து விட்டது என்று பொதுமக்கள் பல இடங்களில் புகார் கூறினர். பெரும்பகுதி வெள்ளத்தில் பல நாட்கள் மூழ்கியிருந்தன. மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டுவிட்டது. குப்பைகளும், கழிவு நீரும் வெள்ளத்தில் கலந்து பல நாட்களாக தேங்கி இருந்ததால் துர்நாற்றம் வீசியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த வெள்ளத்திலும் மக்கள் நீந்தி சென்று சாலைமறியல் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த பிறகுதான் அதிகாரிகள் வந்து வெள்ளத்தை வடிகட்ட சில இடங்களில் நடவடிக்கை எடுத்தனர். இத்தகைய மெத்தன போக்கு அனைவராலும் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த வெள்ளச்சேதத்தில் இருந்து விடுபட ஒரு நிரந்தர, நிம்மதி தரத்தக்க திட்டத்தை தீட்டி ஏன் இந்த அரசுகள் செயல்படவில்லை என்பதே மக்களின் ஏக்கம். பிச்சை எடுக்கிறவர்களுக்கு பெயர் என்ன என்று கேட்டால், லட்சுமி என்று சொன்னாளாம். அதைப்போல இருக்கிறது சீரழிந்து வரும் சென்னையை சிங்கார சென்னை என்று பட்டம் கொடுத்து அழைப்பது என்று விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.