கோபியில் கர்நாடகா அரசு பேரு‌ந்து உட்பட 2 பேரு‌ந்துக‌ள் ஜப்தி!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (19:04 IST)
விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்காததா‌ல் கர்நாடக அரசு பேரு‌ந்து உட்பட இரண்டு பேரு‌ந்துகளை கோபியில் நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.

கோவை மாவட்டம் கள்ளிபாளையத்தை‌ச் சேர்ந்தவர் ரவிச்சந்திர‌ன். இவருடைய மகன் சரவணகுமார் (3). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று‌க் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேரு‌ந்து இவர்கள் மீது மோதியதில் சரவணகுமார் ‌நிக‌ழ்‌விடத்திலேயே உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

இது குறித்து கோபி விரைவு நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி பிரேம்குமார் சரவணகுமாரின் குடும்பத்திற்கு ரூ.1.75 லட்சம் நஷ்டஈடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடை வழங்காத காரணத்தால் ரவிச்சந்திரன் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோபி விரைவு நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் தமிழக அரசு பேரு‌ந்து ஒன்றை ஜப்தி செய்ய ஆணையிட்டார்.

இதேபோல் நஷ்டஈடு வழங்காத கர்நாடகா அரசு சம்பந்தப்பட்ட மற்றொறு வழக்கில் கர்நாடக அரசு பேரு‌ந்தை ஜப்தி செய்ய ‌நீ‌திப‌தி உத்திரவிட்டார். கோபி விரைவு நீதிமன்ற பணியாளர்கள் கோபி பேரு‌ந்து நிலையத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேரு‌ந்து மற்றும் மைசூரில் இருந்து ஈரோடு வந்த கர்நாடகா அரசு பேரு‌ந்து ஆகிய இர‌ண்டு பேரு‌ந்துகளையு‌ம் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு ஓட்டி சென்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் அடிக்கடி அரசு பேரு‌ந்துக‌ள் ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பொதுமக்கள் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மீது கடு‌ம் அதிரு‌ப்தி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்