பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைகிறது : ஆற்றில் தண்ணீர் விடுவது நிறுத்தம்!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (18:55 IST)
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இத‌ன் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் விடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

webdunia photoFILE
ஈரோடு மாவட்டத்தை பசுமையாக வைத்திருப்பது பவானிசாகர் அணையாகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் சந்திக்கும் இடம் பவானிசாகர் அணையாகும்.

இந்த அணையில் இருந்து பவானி கூடுதுறை வரையிலும் வரும் பவானி ஆற்றில் இருந்து சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, கோபி, பவானி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேரூராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இதேபோல், கீழ்பவானி வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீர் இரண்டு லட்சத்து ஏழு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை வளமாக்குகிறது. பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கண்கோட்டை மற்றும் காலிங்கராயன் பகுதியை சேர்ந்த முப்பது ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசனம் பெறுகிறது.

பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் 15 அடி சகதி கழித்து மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். இதில் தற்போது 95.57 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

தமிழகம் முழுவதும் பலத்த மழையினால் ப‌ல்வேறு அணைக‌ள் ‌நிர‌ம்‌பி வரு‌ம் ‌நிலை‌யி‌ல், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு தற்போது வினாடிக்கு 1,102 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்துகொண்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்த காரணத்தால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் விடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.