அண்மையில் உருவான 'நிஷா' புயல் மற்றும் கன மழைக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு துறைகளால் எடுக்கப்படும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், துரிதப்படுத்தவும் அமைச்சரவை துணைக்குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இக்குழுவிற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைவராகவும், வேளாண்துறை, பொதுப்பணித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இத்துணைக் குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிவாரண பணிகளை துரிதப்படுத்த இக்குழு பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு செய்தது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகைகள் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று அமைச்சர்கள் ஆணையிட்டார்கள்.
மேலும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை குறித்து புதிதாக அரசால் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பாதிக்கப்பட்ட வீடுகள் பற்றிய கணக்கெடுப்பை உடனடியாக இறுதி செய்ய வேண்டும் என்றும் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூ.1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படவேண்டும் என்றும் சென்னை மற்றும் அதைச்சார்ந்த பகுதிகளில் வெள்ளநீர் புகுந்த வீடுகள் அனைத்திற்கும் ரூ.2,000 நிவாரணமாக உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவற்கு தற்போது 1,327 நிவாரண முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் அவற்றில் 8,80,897 நபர்கள் தங்கியுள்ளதாகவும், இதுவரையில் 14,87,911 உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் இந்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு செல்லும் வரையிலும் தேவையான உணவுகளை வழங்கவேண்டும் என்றும், மேலும் இந்த முகாம்கள் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான அனைத்து குடிசை வீடுகளுக்கும் அரசு உத்தரவின்படி ரூ.2000 நிவாரணத் தொகையாகவும், அதோடு 10 கிலோ அரிசியும் உடனடியாக வழங்கிட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரவை துணைக்குழு கேட்டுக்கொண்டது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 7,72,327 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால், இதுபற்றிய கணக்கெடுப்பை விரைவுபடுத்தி நிவாரண தொகை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவுறுத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார்கள்.
பெருமழையின் காரணமாக ஆங்காங்கே சேதமடைந்த சாலைகள் உடனடியாக செப்பனிடப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள நெஞ்சாலைத்துறையை அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.
மேலும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் குளங்கள் மற்றும் கண்மாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளையும், சேதங்களையும் உடனடியாக சீர் செய்யவேண்டும் என்றும், குளங்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள தண்ணீர் மேலும் வீணாகாதபடி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.
வெள்ள நிவாரண பணிகள் அனைத்தையும் போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் இப்பணிகளை விரைவில் நிறைவேற்றி அவற்றை 6.12.2008 அன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவை துணைக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில் தெரிவிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
மேலும், ஒவ்வொரு பகுதியிலும் வெள்ளம் வரும் பொழுதெல்லாம் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கருத்தில் கொண்டு, இச்சேதாரங்களை நிரந்தரமாகத் தவிர்த்திட ஒவ்வொரு துறையும் ஒரு நீண்டகாலத் திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் இறுதி செய்து இக்குழுவிற்கு அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர், உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.