தொழில் நுட்ப மையம்: அமைச்சர் பொன்முடியுடன் கனடா குழுவினர் ஆலோசனை
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:39 IST)
தமிழ்நாட்டில் உள்ள பல்தொழில் நுட்பப்பயிலகங்களின் திட்டச் செயல்பாடுகளை சென்று பார்வையிட்ட கனடா குழுவினர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து தொழில் நுட்ப மையங்கள் அமைக்க உதவுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
கனடா இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டம் ஒரு தொழில் நுட்பக்கல்வித் திட்டம். இத்திட்டம் 1991ஆம் வருடம் கனடா, இந்திய அரசின் ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டம், தமிழ்நாட்டில் 1993-1999 ஆம் ஆண்டுகளில் ஒன்பது பல்தொழில்நுட்பப் பயிலகங்களில் அமலாக்கப்பட்டது. தற்போது 92 பல்தொழில் நுட்பப் பயிலகங்களில் இத்திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 30,000 மாணவர்கள், பொதுமக்கள், தொழிற்துறையைச் சார்ந்தவர்கள் பயனடைகிறார்கள்.
இத்திட்டத்தின் மூலம் கனரக இயந்திரங்களை இயக்குதல், தங்க மதிப்பீடு செய்தல், ஆயுர்வேத அழகுக்கலை, நறுமண சிகிச்சை, இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி பழுது பார்த்தல், குழாய் பழுது பார்த்தல், ஆகிய திறன் சார்ந்த தொடர் கல்வி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இத்திட்டம் ஏழைகளின் சமுதாய, பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இத்திட்டத்தின் வளர்ச்சியைக் கண்டு, 8 பேர் கொண்ட கனடா நாட்டவர் குழு கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள சில பல்தொழில் நுட்பப்பயிலகங்களில் இத்திட்டச் செயல்பாடுகளை சென்று பார்வையிட்டனர். இக்குழு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் பல்தொழில்நுட்பப் பயிலகங்கள், கனடா நாட்டின் சமுதாயக்கல்லூரிகளின் தொழில்நுட்பப் பரிமாற்றம், தமிழ்நாட்டில் உயர்திறன் சார்ந்த தொழில் நுட்ப மையங்கள் அமைப்பதில் உதவுதல் ஆகியவை பற்றி விவாதித்தனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.