கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தங்கமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குளோரி சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக நடந்த இந்த மனு மீதான விசாரணை முடிந்து இந்த வழக்கில் நீதிபதி நாகப்பன் இன்று தீர்ப்பளித்தார்.
குளோரி சந்திரா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது பள்ளி சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. கிறிஸ்துவராக மாறி இருப்பதால் அவர் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையை அனுபவிக்க முடியாது.
எனவே அவர் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனுதாரர் தங்கமுத்துவுக்கு வழக்கு செலவுக்கான தொகை ரூ. 5 ஆயிரத்தை குளோரின் சந்திரா வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.