கண்கள் பனித்தது, இதயம் இனித்தது: மாறன் சகோதரர்கள் சந்திப்பு குறித்து கருணாநிதி கருத்து
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (11:18 IST)
முதல்வர் கருணாநிதியை தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, கண்கள் பனித்தது, இதயம் இனித்தது என்றார்.
முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன், மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, முதல்வரின் மகள் செல்வி ஆகியோர் 2 கார்களில் வந்தனர். முதல்வருடன் அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
webdunia photo
WD
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கருணாநிதியிடம், இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை என்று கருணாநிதி பதில் அளித்தார்.
உணர்வுபூர்வமாக எப்படி இருந்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, எனக்கு கோபம் வரும் போதும், வருத்தம் வரும் போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின் போதும் இருந்தது என்றார்.
இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, இதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது என்றார்.
குருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது? என்று கேட்டதற்கு, எங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு என்று பதில் அளித்தார்.
பேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது என்ற மற்றொரு கேள்விக்கு, கண்கள் பனித்தது, இதயம் இனித்தது என்று முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.