கருணாநிதியுடன் மாறன் சகோதரர்கள் திடீர் சந்திப்பு!
திங்கள், 1 டிசம்பர் 2008 (19:14 IST)
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் மற்றும் அவரது அண்ணனும் சன் குழும நிர்வாக இயக்குனருமான கலாநிதிமாறன் ஆகியோர் தமிழக முதல்வரும் அவர்களது தாத்தாவுமான கருணாநிதியை இன்று மாலை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திடீரென சந்தித்துப் பேசினர்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, மாநிலங்களவை உறுப்பினரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களான உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்பட மற்ற குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை, எனினும் முதல்வர் கருணாநிதியுடனான மாறன் சகோதரர்களின் இந்த திடீர் சந்திப்பால் பழைய பகைமை மறந்து மீண்டும் அவர்களது குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி வெளியான தினகரன்' நாளிதழில் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்ற கருத்துக் கணிப்பு வெளியானது. இதில் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், மற்றொரு மகன் அழகிரிக்கு மிகவும் குறைந்த ஆதரவே உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஆத்திரமைடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை 'தினகரன்' அலுவலகத்தை அடித்து நொறுக்கியதோடு, தீ வைத்துக் கொளுத்தினர். இந்த கலவரத்தின் போது அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் பலியானார்கள்.
இந்த கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, மத்திய தொலைத் தொடர்பு மற்றுத் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவுக் கூறத்தக்கது.