தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்

திங்கள், 1 டிசம்பர் 2008 (13:03 IST)
அரு‌ந்த‌திய‌ரசமுதாய‌த்‌தினரு‌க்காத‌னி ஒது‌க்‌கீடகு‌றி‌த்தஜெய‌ல‌லிதகூ‌றியத‌ற்கு க‌ண்ட‌னமத‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ரத‌மிழமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி.

இது கு‌றி‌த்து அவ‌ர் ‌எழுதிய கடிதத்தில், எப்போதும் எதிரிக் கட்சியாகவே எகிறிக் குதிப்பதும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதும், "எல்லாம் எமக்குத் தெரியும்'' என்ற "திருவிளையாடல்'' திரைப்படப்பாணியில் தனது தலைக்கனத்தையும் தன்முனைப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வதும் ஜெயலலிதாவின் குண விசேஷம்.

அதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் அருந்ததியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்த அவரது அறிக்கையும் அமைந்திருக்கின்றது. எடுத்த எடுப்பிலேயே அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று அருந்ததிய மக்களை நான் ஏமாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அருந்ததிய மக்களை மட்டுமல்ல, அருந்தமிழ் நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் ஏய்த்து, ஏமாற்றி அரசியல் நடத்தி வருபவர்தான் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரை வேக்காட்டு அறிக்கைகளையும், நாச எண்ணம் கொண்ட நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' என்ற தஞ்சை ராமையா தாசின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

"தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை'' என்கிறார் ஜெயலலிதா தனது அறிக்கையில். அதற்கு ஆதரவாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341-வது பிரிவைக் குறிப்பிடுகிறார்.

அரசியல் சட்டத்தின் 341 (1)வது பிரிவு ஒவ்வொரு மாநிலத்திலும், தாழ்த்தப்பட்டோர் யார்-யார்? என்று இந்தியக் குடியரசுத் தலைவர் வெளியிடும் அறிவிக்கை பற்றியதாகும். 341(2)வது பிரிவு இந்தியக் குடியரசுத் தலைவர் வெளியிடும் அறிவிக்கையில் எதனையும் சேர்ப்பதற்கு அல்லது நீக்குவதற்கு நாடாளுமன்றத்திற்குத் தரப்பட்டுள்ள அதிகாரம் பற்றியதாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவிக்கையின் படி, 76 சாதியினர் தாழ்த்தப்பட்டோர் எனும் பிரிவுக்குள் அடங்குவர். இன்னும் ஆதாரம் தேவையானால், 12.3.2008 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் அந்தக் கட்சியின் முன்னோடிகளான டி.ஜெயக்குமாரும், எஸ்.அன்பழகனும் கலந்து கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விரிவான முறையில் விசாரித்தறிந்து அண்மையில் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அமைந்துள்ள ஆணைய‌த்‌தி‌ன் நிலையையும் ஆராய்ந்து தேவைப்பட்டால் அவர்களையும் கலந்து கொண்டு அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் குழு அமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

அதற்கேற்ப நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை‌யி‌ன்படி இந்த அரசு செயல்பட முனையும் போது அதற்கு மாறான முரண்பட்ட கருத்தினை ஜெயலலிதா தன் அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.


நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அரசியல் சட்டத்தின்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் எவ்வித மாற்றத்தையும் செய்திடவில்லை. எந்த சாதியையும் அப்பட்டியலில் சேர்த்திடவோ, அல்லது நீக்கிடவோ முயற்சி செய்திடவில்லை. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் என்கின்ற சமுதாயத் தொகுப்பின் கீழ் அதே பட்டியலில் இடம் பெற்றுள்ள அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிகா மற்றும் தோட்டி ஆகிய ஏழு ‌பிரிவினரை உள்ளடக்கி, தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் தற்போது மொத்தமாக வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த ஏழு பிரிவினரின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமான விகிதப்படி 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரை தமிழக அமைச்சரவையால் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயலா? அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப்புறம்பானதா? அரசியல் சட்ட மாமேதை (ப) ஜெயலலிதா தான் அவனிக்கு விளக்கிட வேண்டும்.

.தாழ்த்தப்பட்டோருள் அருந்ததிய சமுதாயத்தினருக்கு முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கிட முடிவெடுத்ததற்கு ஏற்கனவே முன் மாதிரி இருப்பதை ஜெயலலிதாவுக்கு யாரும் எடுத்துரைக்கவில்லை போலும்.

பஞ்சாப் மாநிலத்திற்கான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் 39 சாதியினரை உள்ளடக்கி இந்திய அரசியல் சட்டத்தின்படி, அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எற்கனவே இருந்து வந்த மொத்த ஒதுக்கீடான 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் பால்மீக்கிகள், மஷாபி சீக்கியர்கள் என்ற இரண்டு பிரிவினருக்கு மட்டும் 12.50 சதவிகித உள் ஒதுக்கீடு 5.5.1975 முதல் ஓர் அரசு அறிவிக்கையின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றம், பஞ்சாப் அரசு சட்டமாக இதனை நிறைவேற்றாமல், வெறும் ஆணையாக மட்டுமே அமல்படுத்தி வந்ததை 25.7.2006 அன்று ரத்து செய்தது. எனினும் பஞ்சாப் மாநில அரசு அந்த இரு பிரி‌வினருக்குமான உள் இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து நடைமுறைப்படுத்திடும் வகையில் 5.10.2006 அன்று சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அது இன்றளவும் செயல் முறையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.

அதனால் தான் நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தமது அறிக்கையிலே இம்மாதிரியான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு, பஞ்சாப் மாநிலத்தில் 2006-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் எண். 22-ன் படி 4-வது பிரிவில் 5-வது கிளைப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதைப் போன்று- அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட எவ்விதத் தயக்கமுமின்றிச் சட்டம் இயற்றலாம். அப்படி சட்டம் இயற்றுவதற்கு முன்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338 (9) வது பிரிவின்படி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசனை செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளபடி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங்க்கு அருந்ததியினருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கருத்துருவினைப்பற்றிய அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.


இவ்வாறு அருந்ததியருக்கான தனி இட ஒதுக்கீடு தொடர்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வழி முறைகளைச் சிறிதும் பிசகாமல் தமிழக அரசு பின் பற்றி வருகிறது. எனவே அருந்ததிய சமுதாயத்தினருக்குக் கிடைத்திட போகும் விருந்தில் விஷம் கலக்கலாம் என்ற ஜெயலலிதாவின் கனவு வீண் கனவு, பகல் கனவு!

ஏதோ, தான் முதலமைச்சராக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை அருந்ததிய இன மக்கள், ஆதிதிராவிட மக்கள், மற்றும் தேவேந்திர குல வேளாள மக்கள் தன்னிடம் வைத்ததாகவும், அவர்களது கோரிக்கையை நிறை வேற்றுவது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததாகவும் தனது அறிக்கையிலே கதை அளந்திருக்கிறார் ஜெயலலிதா.

அப்படி அவர் செய்ததற்கான அரசாங்கத்தின் கோப்பை சுட்டிக்காட்ட முடியுமா? அதற்கு அரசு ஆவணங்களோ, ஆதாரங்களோ உண்டா? போகிற போக்கில் பொய்யையும், புரட்டையும், புளுகையும் அவிழ்த்து விட்டால், அதனை நம்புவதற்குத் தமிழர்கள் என்ன இளித்தவாயர்களா? அப்படி ஒரு சிலர் இருந்தால் அவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளவும்.

வெற்று அறிக்கைகள், வீணான ஆரவாரங்கள், வேடிக்கை அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை விடுத்து, ஆரோக்கியமான அரசியலைப் பின்பற்றி நாட்டு மக்கள் நலன்கருதி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இனியாவது வழங்குவது ஜெயலலிதா போன்றவர்களுக்கு நல்லது. "நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்!'' என்னும் புறநானூற்று வாசகம் அவர்களுக்கெல்லாம் நல் ஒளியும்-நல் வழியும் காட்டட்டும்.

அருந்ததிய சமுதாயத்தினருக்குக் கிடைத்திட இருக்கும் தனி இட ஒதுக்கீட்டினைத் தடுத்திட முனைபவர்கள், அதனைக் கொண்டு வர பாடுபடுபவர்கள் யார் என்பதை அந்தச் சமுதாயத்தினர் இப்போதாவது அடையாளம் கண்டு கொள்ளட்டும்.

கடைக்கோடியில் இருக்கும் அருந்ததிய சமுதாயத்தினருக்கான தனி ஒதுக்கீட்டிற்கு தடைக் கற்களைப் போட எண்ணாமல் ஜெயலலிதா போன்றவர்கள் தள்ளி நிற்கட்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்