மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக மிகவும் அதிக அளவில் மழை பெய்துவரும் காரணத்தால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மிகக் கடுமையான அளவிலும் மாநிலத்தின் ஏனைய மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பெரும்பாலான நீர் ஆதாரங்களிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உணவு, உடையின்றி இன்னலுக்கு ஆளாகிவரும் சூழலில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் ஆறுதல் அளிக்கின்றன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 20 கிலோ அரிசி, உணவுப் பொருட்கள், உடைகள் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். அத்துடன் நிலைமைக்கேற்றபடி மண்ணெண்ணெய் அடுப்பு, பாத்திரங்கள், போர்வை போன்ற இன்றியமையாதத் தேவைகளுடன் உரிய மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.3000ம், கடுமையான பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு ரூ.5000ம், கால்நடைகள் இறப்பு, பயிர்களின் பாதிப்புக்கு ஏற்ற வகையில் உரிய நிவாரண உதவியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுதலைச் சிறுத்தைகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு தம்மால் இயன்ற நிவாரணப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த அடைமழையின் காரணமாக டிசம்பர் 1ஆம் நாள் சென்னையில் நடைபெறவிருந்த இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் தொடக்க விழா, தமிழீழ அங்கீகார மாநாடு வருகிற டிசம்பர் 14ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.