கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இன்று காலை 9 மணிக்கு கடலூர் பழைய நகரம் (ஓ.டி.) பகுதியில் உள்ள தனியார் பள்ளி, குறிஞ்சிபாடி அரசு பள்ளி மற்றும் மருவாய் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையைவிட 20 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், மொத்தம் 2 ஆயிரத்து 231 வீடுகள் முழுவதுமாகவும், 13 ஆயிரம் வீடுகள் பகுதியளவுக்கும் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.
மாவட்டத்தில் 86 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கடலூர் மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
ஸ்டாலினுடன் சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்களும் சென்றனர்.