தமிழகத்தில் 5 புதிய ரயில்பாதை திட்ட‌ம் : டி.ஆர். பாலுவிடம் கருணாந‌ி‌தி உறுதி!

வியாழன், 27 நவம்பர் 2008 (00:08 IST)
தமிழகத்தில் 5 புதிய ரயில்வே பாதைகள் அமை‌க்க தமிழக அரசின் பங்கை அளிப்பதற்கு முதல்வரகருணாநிதி உறுதி அளித்துள்ளதாக மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

த‌மிழக‌த்‌தி‌ல் ரூ.271.54 கோடி செலவில் நீடாமங்கலம் முதல் மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை வரை புதிய வழித்தடம், ரூ.279.41 கோடி செலவில் அரியலூர் முதல் தஞ்சாவூர் வரை, ரூ.504.9 கோடி செலவில் திண்டுக்கல் முதல் குமுளி வரை, ரூ.146.42 கோடி செலவில் மொரப்பூர் முதல் தருமபுரி வரை, ரூ.356.773 கோடி செலவில் திருவண்ணாமலையிலிருந்து ஜோலார்பேட்டை வரை புதிய வழித்தடம் ஆ‌கிய 5 ர‌யி‌ல் பாதைக‌ள் அமை‌க்க‌ப்பட உ‌ள்ளன.

புதிய ரயில் வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் டி.ஆர் பாலு ஆலோசனை நடத்தினார். அப்போது அதற்கான செலவில் குறைந்தபட்சம் 50 ‌விழு‌க்கா‌ட்டதமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கையை எடுத்துக் கூறினார்.

மேலு‌ம், இந்த திட்டங்களை மேற்கொள்வதற்கான வகையில் நிதி பற்றாக்குறை இருப்பதையும் இதை செயல்படுத்தவதில் மத்திய திட்டக் குழு சிரமங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியதையும் விளக்கிக் கூறினார். மேலும் ரயில்வே அமைச்சகம் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கும் நிலையில் இந்த திட்டங்களை செயல்படுத்த நிதி பற்றாக்குறை இருப்பதாக ரயில்வே அமைச்சகம் கூறியதையும் சுட்டிக்காட்டி மாநில அரசு 50 ‌விழு‌க்காடு திட்டச் செலவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்த பணிகளை விரைவில் மேற்கொள்ள இயலும் என்பதையும் அவ‌ர் விளக்கிக் கூறினார்.

தற்போது அந்த பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் முதல்வர் கருணாந‌ி‌தி இந்த திட்டங்களுக்கான செலவில் தமிழக அரசு தனது பங்களிப்பை ஏற்றுக் கொள்வதை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்