வங்கக் கடலில் உருவாகி வலிமை பெற்ற நிஷா புயல் நாகப்பட்டிணத்திற்கும், வேதாரண்யத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் இன்னமும் நிலைகொண்டுள்ளது, கரையைக் கடக்கவில்லை.
நிஷா புயல் இன்று பிற்பகல் அல்லது மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்தது. ஆனால் கரையைக் கடக்கவில்லை. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டிலும், கரையோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
ஆனால் பெரம்பலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழை நின்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையாலும், வெள்ளத்தாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 121 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3,089 குடிசைகள் சேதமடைந்துள்ளன என்று இன்று தலைமை செயலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 64 பேர்களில் 42 பேர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலியில் தொடர்ந்து பெய்த மழையால் நிலக்கரி சுரங்கங்களில் மழை நீர் தேங்கியதால், அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதென நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.