தென்மேற்கு வங்கக் கடலில் நாகப்பட்டிணத்திற்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாக புதுச்சேரி மாநிலத்தில் விடாது அடை மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதுவையில் 18.25 செ.மீ. மழை பெய்துள்ளது.
புதுவையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருவதால் அங்கு வாழ்ந்த மக்கள் உடன் பொருட்களுடன் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உப்பனாறு வடிகாலின் வாயிலாக கடல் நீர் உட்புகுந்ததால் வேம்பக்கீரப்பாளையம் பகுதியில் வாழ்ந்த மக்கள் அருகிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையாலும், ஆங்காங்கு நீர் தேங்கியதாலும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் நீர் வெளியேற்றியைப் பயன்படுத்தி தேங்கியுள்ள நீரை அகற்றி வருகின்றனர்.
முதலமைச்சர் வைத்தியலிங்கமும், அமைச்சர்களும் நிவாரணப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.