வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை பெய்கிறது.
சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாகவே செல்கின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டனர். பல பேர் அலுவலகத்திற்கு செல்ல முடியாததால் விடுமுறை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கைக்கு தென்மேற்கிலும், தமிழ்நாட்டில் பாம்பனில் இருந்து தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தூரத்திலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது, பாம்பன்-நாகப்பட்டினத்திற்கு இடையே இன்று மாலை (புதன்கிழமை) கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.