காங். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகாததால் ஜெயலலிதாவுடன் சந்திப்பு : ஆர்.நல்லகண்ணு!
புதன், 26 நவம்பர் 2008 (05:41 IST)
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக தயாரில்லாததால் தான் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்தார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் செயலர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் ஏ.பி.பரதன், அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்தது சம்பந்தமாக முதல்வர் கருணாநிதி தவறான செய்தியை தெரிவித்திருக்கிறார்.
19-11-2008 அன்று ம.தி.மு.க.வினர் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார்கள் அதை முடித்துவைப்பதற்காக நான் செல்வதென்றும், பொது செயலர் ஏ.பி.பரதன், துணை பொது செயலர் சுதாகர் ரெட்டி எம்.பி., மாநில செயலர் தா.பாண்டியன் ஆகிய மூவரும் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்திப்பது என்றும் பேசி முடிவு எடுத்துதான் சென்றார்கள். ஏதோ நான் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது தவறான கருத்து என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலரை அவசரமாக சந்தித்ததாகவும், லட்சியப் பயணம் அல்ல, தேர்தல் பயணம் என்றும் சொல்லியிருக்கிறார். தேர்தல் பேச்சு வார்த்தை நடத்துவதும், அணி சேர்வதும், குறிப்பிட்ட அரசியல் கொள்கை அடிப்படையில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனையும், நாட்டின் இறையாண்மையை காப்பதிலும் அக்கரையை முதன்மைப்படுத்தியே தேர்தல் களத்திலும் இறங்கினோம்.
பாரதீய ஜனதா கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியுடன் சேரும் கட்சிகள் நீங்கலாக மற்றக் கட்சிகளுடன் தேர்தல் பேச்சு வார்த்தை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.
காங்கிரஸ் கூட்டில் இருந்து தி.மு.க. விலக தயாரில்லை. இதன் அடிப்படையில் தான் அ.தி.மு.க. பொதுச் செயலரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தித்தார்கள்" என்று நல்லகண்ணு கூறியுள்ளார்.