பலத்த மழை எதிரொலி : 13 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (22:38 IST)
தமிழகத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 13 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிக் கூடங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிக்கூடங்களுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.