இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையை ராமநாதபுரம் நீதிமன்றம் விலக்கியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகினர் கடந்த மாதம் 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் இருந்ததாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் பிணை விடுதலை கேட்டு நீதிமன்றத்தில் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களுக்கு பிணை வழங்கியது.
இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென இருவரின் சார்பில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், மதுரையிலிருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகள் விலக்கப்படுவதாக உத்தரவிட்டது.