கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு கிராமத்தில் புகுந்தது: நீர் சீரமைக்கும் பணி துவக்கம்!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (11:02 IST)
கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட ஏரி உடைப்பின் காரணமாக கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதை சீரமைக்கும் பணி இன்று காலை துவங்கியது.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் 100 கி.மீ., தூரத்திற்கு சென்று பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கீழ்பவானி பாசன பகுதியில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர்.
கீழ்பவானி வாய்க்காலின் 55 வது கி.மீ. தூரத்தில் உள்ள தாமரைக்காடு பகுதியில் நேற்று கீழ்பவானி வாய்க்காலில் இருந்து சுமார் இரண்டு அடி அகலத்திற்கு ஏரி கரை உடைந்து தண்ணீர் வருவதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் தெரிந்ததும் பொதுப்பணித்துறையினர் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு திறந்துவிடும் தண்ணீரை முற்றிலும் நிறுத்தினர்.
webdunia photo
WD
உடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் 50 அடி அகலத்திற்கு பெரியபள்ளம்போல் ஆகியது. பகலில் ஏற்பட்ட இந்த உடைப்பின் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் பத்திரமான இடத்திற்கு சென்றுவிட்டனர். இதனால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. இந்த உடைப்பினால் அப்பகுதியை சேர்ந்த சுமார் 300 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நாசமானது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள சின்னியம்பாளையம், கூரப்பாளையம், தோட்டாணி, சத்திரம்புதூர், கதிரம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. உடைந்த ஏரியை சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. ஒரேநாளில் இந்த பணி முடிக்கப்பட்டு நாளை பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி திட்டமிட்டு பணிகள் நடப்பதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் கூறினார்.