வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க டிசம்பர் 2 வரை அவகாசம் நீட்டிப்பு: நரேஷ் குப்தா!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (10:22 IST)
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் விண்ணப்ப மனுக்களை சமர்ப்பிக்க கால அவகாசம், டிசம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜனவரி மாதத்தில் 18 வயது பூர்த்தி அடைவோர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்றார்.
இதில், மற்றவர்களும், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் போன்றவற்றை செய்து கொள்வதற்காகவும், ஆட்சேபணைகளை தெரிவிப்பதற்காகவும், வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்த நரேஷ்குப்தா, இதற்காக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ள அந்தந்த வாக்குச்சாவடிகள் உள்பட பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
பெயர் சேர்ப்பு உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்ப மனுக்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே கிடைக்கும் என்று தெரிவித்த நரேஷ்குப்தா, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்க, நவம்பர் 17ஆம் தேதியில் இருந்து நவம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசத்தை, தமிழகம் முழுவதுமாக அனைத்து மாவட்டங்களுக்குமாக சேர்த்து, டிசம்பர் 2ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியல் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்றார்.