இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக 12 கோடியே 61 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் கருணாநிதியிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசின் பல்வேறு அரசுத்துறைகள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், கலையுலகினர், வர்த்தக பிரமுகர்கள், பல்வேறு தொழிற்சங்கப் பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து தாராளமாக நிதி வழங்கியுள்ளனர்.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பாக 5 கோடியே 98 இலட்சத்து 87 ஆயிரத்து 410 ரூபாயும், தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக 6 கோடியே 14 இலட்சத்து 29 ஆயிரத்து 746 ரூபாயும், அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்ககம் சார்பாக 25 இலட்சத்து 96 ஆயிரத்து 432 ரூபாயும், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பாக 20 இலட்சத்து 93 ஆயிரத்து 623 ரூபாயும், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் சார்பாக 36 ஆயிரத்து 628 ரூபாயும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பாக 68 இலட்சத்து 998 ரூபாயும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பாக 12 ஆயிரம் ரூபாயும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பாக 64 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 12 கோடியே 61 இலட்சத்து 88 ஆயிரத்து 837 ரூபாய் வழங்கியுள்ளனர்.
இத்தொகைக்குரிய காசோலைகளை முதலமைச்சர் கருணாநிதியிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வழங்கினார்.