10ஆம் வகுப்பு கணிதம், அறிவியலில் கடின பாடம் நீக்கம்!
திங்கள், 24 நவம்பர் 2008 (13:54 IST)
பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணிதம், அறிவியல் பாடங்களில் உள்ள கடினமான பகுதிகளை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைமுறையில் உள்ள 10ம் வகுப்பு கணிதம், அறிவியல் பாடப் புத்தகங்களில் சில பாடப் பகுதிகள் கற்பதற்கு கடினமாக உள்ளது எனவும் அவைகளை நீக்கம் செய்திட வேண்டுமென மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடமிருந்தே அரசுக்கு கோரிக்கைகள் வந்தன என்றார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட பாடக்குழுத் தலைவர்கள், புத்தகம் எழுதிய நூல் ஆசிரியர்கள் மற்றும் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கி குழு ஆய்வு செய்து கடினமான சில பாடப் பகுதிகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக நீக்கம் செய்து இந்த கல்வி ஆண்டு முதலே அதை நடைமுறைப்படுத்திட பரிந்துரைத்தனர். இந்த ஆண்டு முதலே இது அமுலுக்கு வரும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
நீக்கப்பட்ட பகுதிகள் வரும் அரையாண்டு தேர்விலும், 10ம் வகுப்பு பொது தேர்விலோ கேள்வித் தாள்கள் இடம் பெறாது என்று தெரிவித்த அமைச்சர், கடந்த ஆண்டு 2 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களின் மாணவர்கள் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக அளவில் தோல்வி அடைவதை கண்டறிந்து உண்மையிலேயே இந்த பாடப்பகுதியில் பி.எஸ்சி பாடத்துக்கு இணையாக இருப்பதை கண்டறிந்து அதன் பின்னர்தான் குழு மூலம் ஆய்வு செய்து கடினமான பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது என்றார்.
மாநில கல்வி திட்டத்தின் படி 10ஆம் வகுப்பு படிக்கும், மாணவ- மாணவிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் பாடத் திட்டம் நீக்கத்தால் கல்வியின் தரம் எந்த வகையிலும் குறையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மழை நேரங்களில் அரசு விடுமுறை அறிவித்த பிறகும் விடுமுறை விடாத தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்தார்.