இலங்கை‌‌ப் பிரச்சனை: நாளை சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்!

திங்கள், 24 நவம்பர் 2008 (15:51 IST)
''இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நா‌ம் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி முடிவு செ‌ய்ய நாளை ச‌ட்டம‌ன்ற க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் எனது தலைமை‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்‌னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளவும், மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யவும், சட்டமன்றத்தில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை (25ஆ‌ம் தேதி) காலை 10 மணிக்கு தலைமை‌ச் செயலகத்தில் எனது அறையில் நடைபெறவிருக்கிறது எ‌ன்று கூ‌றினா‌ர்.

கட்சியின் தலைவர், பொதுச் செயலர், மாநில செயலர் என்ற முறையில் ஒருவரும், சட்டமன்ற கட்சி தலைவர் ஒருவருமாக 2 பேர் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை கூற வே‌ண்டு‌மெ‌ன்று இ‌ன்று கடிதம் எழுதியிருக்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்த அவசர கூட்டம் பா.ம.க. நிறுவனர் ராமதாசும், நானும் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த கருணா‌நி‌தி, இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், கட்சி தலைவராகவும் கோ.க.மணி இருந்த போதிலும், நிறுவனத் தலைவர் என்ற முறையில் ராமதாஸ் கலந்து கொள்வார் எ‌ன்றா‌ர்.

அதைப் போலவே ம.தி.மு.க. என்றால் சட்டமன்ற கட்சி தலைவராக மு.கண்ணப்பன் இருக்கிறார். அவரும் கலந்து கொள்ளலாம், அந்த கட்சியின் பொதுச்செயலரான வைகோவும் கலந்து கொள்ளலாம் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்