1998ஆம் ஆண்டே மத்திய அரசு அனுமதி தந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தராவிட்டால், தமிழ் மக்களை கைவிட்டதாகத்தான் அர்த்தமாகும் என்று கூறியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், வீரப்பமொய்லியின் பேட்டிக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் பதில் என்ன? என்று கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஒகேனக்கல் திட்டத்திற்கு இப்போது இடையூறாக நிற்கிறார். இந்தத் திட்டத்தை கர்நாடகம் தடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அறிக்கை கொடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியிடம் சொல்லி எடியூரப்பாவிற்கு அறிவுரை கூற வேண்டும்.
ஒகேனக்கல் பிரச்சனையை பிரதமரும் கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இந்தத் திட்டத்தை கிடப்பில் போடச் செய்த கர்நாடக காங்கிரஸ் கட்சி, மீண்டும் இப்போது வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்டது.
ஒகேனக்கல் பிரச்சனையில் மத்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ தலையிடாது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான வீரப்பமொய்லி டெல்லியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக பேட்டி கொடுக்கிறார்.
தமிழக அரசும் மக்களுக்காக, மக்களின் நன்மைக்காக செயல்பட வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டத்தை மேலும் விரைவுபடுத்த வேண்டும். கூட்டணி, பதவி என்று நம் உரிமையை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.
தமிழக ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தமிழர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சோனியாகாந்தியையும், பிரதமரையும் சந்தித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கர்நாடகம் தடை செய்யக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும். அத்துடன் வீரப்பமொய்லிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு, அதுவும் கர்நாடகாவின் ஒப்புதலோடு 1998ஆம் ஆண்டே மத்திய அரசு அனுமதி தந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் ஆதரவு தராவிட்டால், காங்கிரஸ் கட்சி தமிழ் மக்களை கைவிட்டதாகத்தான் அர்த்தமாகும். வீரப்பமொய்லியின் பேட்டிக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் பதில் என்ன?'' என்று சரத்குமார் கேட்டுள்ளார்.