ஆள் கடத்தல் வழக்கு: என்.கே.கே.பி.ராஜாவுக்கு எதிரான மனு தள்ளுபடி!

ஞாயிறு, 23 நவம்பர் 2008 (13:19 IST)
தமிழக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு எதிரான ஆள்கடத்தல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலனை என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் கடத்தி வைத்துள்ளனர். சிவபாலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையினரின் விசாரணை அறிக்கையில் சிவபாலன் ஏழு முறை செல்போன் நம்பரை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிவபாலன், ராஜா ஆதரவாளர்களின் சட்ட விரோதக் காவலில் இருந்தால் அவர் செல்போனை பயன்படுத்தவும், ஏழு முறை நம்பரை மாற்றவும் முடியுமா எனக் கேள்வி எழுப்பினர்.

எனவே, சிவபாலன் சட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூற முடியாது. காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப் பார்க்கும் போது அவர் யாருடைய காவலிலும் இல்லை என்பது தெரிகிறது.

சிவபாலன் தானாகவே தலைமறைவாக உள்ளார் என்ற காவல்துறையினரின் அறிக்கையில் சந்தேகப்படுவதற்கு ஆதாரங்கள் எதும் இல்லாததால், இந்த ஆள்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்