ஜெ. ஆட்சியில் ஜனநாயகம் பாழ்பட்டதாக தெரியவில்லையா : மார்க்சிஸ்டுக்கு கருணாநிதி கேள்வி!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (18:20 IST)
தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் 23 மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டபோது ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் பற்றி கண்ணீர் கட்டுரை வெளியிட்டுள்ள 'விகடன் இதழ்' அடடா ஜெயலலிதாவை எந்த அளவுக்கு தூக்கிப் பிடித்திருக்கிறது பார்த்தீரா?
webdunia photo
FILE
அன்னை இந்திரா காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர். சென்னை மருத்துவ மனையில் நோயுற்றுப் படுத்திருந்தபோது, இதே ஜெயலலிதா எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை வந்த பிறகு, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினாரே, அந்த கடிதத்தில்தானே, எம்.ஜி.ஆர். தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும் இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும், தன் கைப்படவே ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி, அக்கடிதம் 'மக்கள் குரல்' பத்திரிகையில் கூட பிளாக்' செய்து வெளியிடப்பட்டிருந்ததே, விகடன் அந்த கடிதம் பற்றி அறியவில்லை போலும்.
சட்டக் கல்லூரி கலவரம், வன்முறை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் போதாது என்றும், பதவியில் இருக்கிற உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்தறிவித்திருக்கிறார்களே?
மேற்கு வங்காள அரசு, நந்திகிராம நிகழ்ச்சிகளுக்கும், காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள் 14 பேர் என்று அந்த மாநில சட்டமன்றத்திலேயே அரசின் சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதே, அதற்கும் உச்ச நீதிமன்றத்தில் பதவியிலிருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்திட முன் வருமா?
அதைப் போலவே சிங்கூர் சிறப்பு பொருளாதார மண்டலப் பிரச்சனையில் 18-12-06 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தெபுமாலிக் மற்றும் கரித்தத்தா ஆகியோர் விவசாய நிலத்தைப் பாதுகாப்போம் இயக்கத்தைச் சேர்ந்த தபசி மாலிக் என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவம் குறித்து பதவியிலே உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்திட தமிழக மார்க்சிஸ்ட் கட்யூனிஸ்ட் பரிந்துரை செய்ய முன் வருவார்களா? அப்படி நடைபெற்றால் அதைப் பாராட்டிவிட்டு அதன் பிறகு தமிழகத்திலே அவர்களின் யோசனையைப் பரிசீலிக்கலாம்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரை 4 நாட்களில் சுருக்கி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் அறிக்கை விடுத்துள்ளாரே?
தமிழக சட்டப் பேரவை 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதற்கேற்ப பட்ஜெட் கூட்டத் தொடர் மே திங்களில் பொதுவாக முடிந்தால், அதற்கு அடுத்து 6 மாதங்களுக்குள் ஒரு முறை சட்டப் பேரவை கூட்டப்பட வேண்டும். அந்த முறையில்தான் நவம்பர் திங்கள் சட்டப் பேரவை கூட்டப்பட்டது.
சட்டப் பேரவை கூட்டப்பட்டபோது, அப்போது அதிலே நிறைவேற்றப்பட வேண்டியவை என்ற வகையில் ஒரு சில அவசர சட்டங்களும், ஒரு சில மசோதாக்களும்தான் இருந்தன. எனவே 4 நாட்கள் அவையை நடத்தினால் போதும் என்ற நிலையே அதிகமாகத் தோன்றியது. அது மாத்திரமல்ல, இதுவரை எந்த ஆண்டிலும், அக்டோபர், நவம்பர் திங்களில் சட்டப் பேரவை, கூடும் போது பொதுவாக 4 நாட்கள்தான் மன்றம் நடைபெறும். அவையை எத்தனை நாள் நடத்துவது, என்னென்ன நாட்களில் எந்தப் பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் சட்டப் பேரவை தொடங்கும் முதல் நாள் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக் குழுவிற்கு சட்டப் பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு முடிவினை எடுத்து, அதன்படிதான் நிகழ்ச்சிகள், விவாதங்கள் நடைபெறும்.
10-11-2008 அன்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றபோது தோழமைக் கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் சட்டப் பேரவையை நான்கு நாட்கள் என்பதற்குப் பதிலாக ஐந்து நாட்கள் நடத்த வேண்டுமென்று விரும்பினார்கள். அத்தனை நாட்கள் விவாதிப்பதற்கான பொருட்கள் இல்லை என்ற போதிலும் மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஐந்து நாட்கள் அவையை நடத்தவும் உடனே ஒப்புக் கொண்டோம். அவ்வாறே பேரவை ஐந்து நாட்கள் நடைபெற்றது.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராசன், அந்த கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் பாலபாரதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை இல்லத்தில் சந்தித்தார்கள். நேற்றைய தினம் (20-11-2008) காலையிலே கூட நண்பர் வரதராசனும், நண்பர்களும் என்னை சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பில் கோயில்பட்டி போன்ற செய்திகள் பேசப்பட்டதே தவிர, அப்போது அவர்கள் சட்டமன்ற நாட்கள் பற்றி எதுவுமே குறையாகச் சொல்லவில்லை. ஆனால் நேற்றைய தினம் அந்தக் கட்சியின் மாநிலச் செயற்குழுவிலேயே பரிசீலித்து எனக்கு ஒரு கடிதம் எழுதி, அதிலே மசோதாக்கள் மீது ஆழமான விவாதங்கள் நடைபெறும் அளவிற்கு கூட்ட நாட்களை நீட்டிக்காமல் நான்கு நாட்களாக சுருக்கியது சட்டப் பேரவை ஜனநாயகம் மறுக்கப்பட்டதாகவே தங்கள் கட்சி கருதுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
சட்டப் பேரவை நான்கு நாட்களாகச் சுருக்கப்படவில்லை. நான்கு நாட்கள் என்பது ஐந்து நாட்களாக அலுவல் ஆய்வுக் குழுவிலே மற்றவர்கள் கேட்டுக்கொண்ட காரணத்திற்காகவே நீட்டப்பட்டதே தவிர சுருக்கப்படவில்லை. அது மாத்திரமல்ல, மசோதாக்கள் விவாதிக்கப்பட்ட நேரத்தில் அவையை மேலும் ஒரு நாள் நீடிப்பு செய்ய வேண்டுமென்று எந்தக் கட்சியின் சார்பிலும் கோரப்படவும் இல்லை. அப்பொழுது சும்மாயிருந்து விட்டு தற்போது வெளியே போய் மாநிலச் செயற்குழுவினைக் கூட்டி முடிவெடுத்து, அதனை எனக்கு கடிதமாக எழுதியதோடு ஏடுகளிலும் வெளியிடச் செய்திருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏதோ இப்போது புதிதாக சட்டமன்றக் கட்சியாக வந்த கட்சி அல்ல. அந்தக் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் பேரவையிலே இடம் பெற்றவர்கள். அப்போது சட்டப் பேரவை எத்தனை நாட்கள் நடைபெற்றது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள், ஜனநாயகம் எந்த அளவிற்குப் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. மசோதாக்களில் பேச எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற அத்தனை விவரங்களையும் அவர்கள் அறிவார்கள். மற்ற கட்சிகள் எல்லாம் ஆளுங்கட்சியின் மீது குறை சொல்லும் போது, நாங்கள் மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்பதற்காகவே குறை கூறுகிறோம் என்றால் அதில் நாம் சொல்வதற்கு ஏதுமில்லை.
சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை துணை அறிக்கையின் மீது கூட கட்சிக்கு ஒரு பிரதிநிதி மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொல்லியிருக்கிறதே?
நான் அருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களை தோழமை உணர்வோடு கேட்டுக் கொள்கிறேன். கடந்த கால ஆட்சிகளில் நிதிநிலை துணை அறிக்கையின் மீது ஒரு கட்சியின் சார்பில் எத்தனை பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள் அது மாத்திரமல்ல, எத்தனை முறை விவாதமின்றியே நிதி நிலை துணை அறிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதையெல்லாம் நாடு நன்கறியுமே? ஓ! அது அந்த ஆட்சிக் காலமோ? மன்னிக்கவும்.
எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு போதிய அளவிற்கு நேரம் ஒதுக்காமலா சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சனையைப் பற்றிப் பேசவே ஒரு நாள் முழுவதும் ஒதுக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பேசுவதற்காகவே தீர்மானம் நிறைவேற்றுகின்ற அன்று ஒரு நாள் முழுவதுமாகவும், பிறகு ஒரு நாள் அதைப் பற்றி சந்தேகம் எழுப்பி அதன் மீது பேசிய வகையில் அரை நாளும் எடுத்துக்கொள்ளப்பட்டது. மற்றப் பிரச்சனைகள் பற்றிப் பேசிட தாராளமாக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தினால்தான் மசோதாக்களை பற்றிப் பேசுவதற்கு நேரம் இல்லாமல் போயிற்று.
மசோதாக்களை பற்றி விரிவாகப் பேசவேண்டும் என்பதற்காகத்தான் அன்றைய தினம் கேள்வி நேரம் என்பதையே நிறுத்தி விட்டு மசோதாக்கள் மீதான விவாதம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்து கொள்ளாமல் வேறு பிரச்சனைகள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதமும் விரிவாக நடைபெற்ற காரணத்தால்தான் மசோதாவில் நீண்ட நேரம் பேச இயலாத நிலைமை ஏற்பட்டது.
தோழமைக் கட்சிகளோ, எதிர்க் கட்சிகளோ பேசக் கூடாது என்ற நிலை தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் எப்போதும் கிடையாது. அதற்கு சான்றுதான். மின்சாரம் பற்றிய விவாதம் அவையிலே நடந்தபோது அ.தி.மு.க.வினரும் அதிலே கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்பதற்காக நானே மூத்த அமைச்சர்களை எதிர்க் கட்சித் தலைவரின் அறைக்கே அனுப்பி எதிர்க் கட்சியினரை அவையிலே கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டேன்.
ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறதே?
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 10.5.2002 அன்று ஒரே நாளில் 21 மசோதாக்களும், 31.7.2004 அன்று ஒரே நாளில் 23 மசோதாக்களும் அதாவது 40 நிமிட நேரத்தில் எந்தவொரு எதிர்க் கட்சியும் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. சிந்தனை செய் மனமே! சீறுவதோ தினமே!